நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்

புதுடெல்லி, ஜூன். 14 நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது.கடந்த 2010 ஆண்டு யங் இந்தியா நிறுவனத்திற்கு நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்திற்கு மாற்றியதில் முறைகேடு நடைபெற்றதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து,நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,ராகுல் காந்தி ஆகியோருக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி,இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஜூன் 8 ஆம் தேதி நேரில் ஆஜராக ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கும் உத்தரவிடப்பட்டது.ஆனால்,சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாலும்,ராகுல்காந்தி வெளிநாடு சென்றிருந்த காரணத்தினாலும் குறிப்பிட்ட தேதியில் ஆஜராகவில்லை. அதன்பின்னர்,நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேற்று ஆஜரானார்.அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து,காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆஜரான நிலையில்,அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வெளியே காங்கிரஸ் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர். அதே சமயம்,அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதன் பின்னணியில் ஆளும் பாஜக அரசு இருப்பதாகவும்,இது அரசியல் பழி வாங்குதல் நடவடிக்கை எனவும் கூறி நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பு நேற்று காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதனைத் தொடர்ந்து,டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜராகிய ராகுல் காந்தியிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து,நேற்று இரவு 11 மணிக்கு பிறகு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில்,இரண்டாவது நாள் விசாரணைக்காக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். இன்றைய தினமும்,6 மணி முதல் எட்டு மணி நேரம் வரை ராகுலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கிடையில்,டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்,நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.