நாடு முழுவதும் தீபாவளி கோலாகல கொண்டாட்டம்

புதுடெல்லி: நவம்பர். 12 -தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை காலத்தில் நாடு முழுவதுமான வர்த்தகம் ரூ.3.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்று அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஒரேநாளில் தங்கம், வெள்ளி மட்டும் ரூ.30,000 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாகவே விற்பனை களை கட்டத் தொடங்கியது. இதுதொடர்பாக அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) நாடு முழுவதும் 30 நகரங்களில் ஆய்வு நடத்தியது. இதில் கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கால விற்பனை அமோகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சிஏஐடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தீபாவளியை ஒட்டி நாடு முழுவதும் சுமார் 65 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்கம், வெள்ளி நகைகள், புதிய வாகனங்கள், புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள், பரிசு பொருட்கள், மின்னணு சாதனங்கள், மளிகை பொருட்கள், காய்கனிகள், அழகு சாதன பொருட்கள், பட்டாசு, இனிப்பு வகைகளை வாங்கி குவித்து வருகின்றனர்.
ஓட்டல்கள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாடு முழுவதும் சுமார் 35 லட்சம் திருமணங்கள் நடைபெறுகின்றன.
தீபாவளியை ஒட்டி உணவு தானியங்கள், மளிகை பொருட்கள் விற்பனை 13 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜவுளி விற்பனை 12 சதவீதம், தங்க நகைகள் விற்பனை 9 சதவீதம், உலர் பழங்கள் விற்பனை 4 சதவீதம், மின்னணு சாதனங்கள் விற்பனை 8 சதவீதம், பரிசு பொருட்கள் விற்பனை 8 சதவீதம், அழகுசாதன பொருட்கள் விற்பனை 6 சதவீதம், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை 3 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.
ஆட்டோமொபைல்ஸ் துறையில் சுமார் 20 சதவீதம் அளவுக்கு வாகனங்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது. தீபாவளி பண்டிகை காலத்தில் ஒரு நபருக்கு ரூ.5,500 என்ற வகையில் செலவு செய்யப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கால விற்பனை ரூ.3.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
தொடர் பிரச்சாரம் காரணமாக இந்திய வணிகர்கள், சீன தயாரிப்புகளுக்கு பதிலாக உள்நாட்டு தயாரிப்புகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதன்காரணமாக சீனாவுக்கு ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாருதி சூசுகி நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஷசாங்க் வஸ்தவா கூறும்போது, “வழக்கமான வாகன விற்பனையை விட 21 சதவீதம் கூடுதலாக வாகனங்களை விற்பனை செய்துள்ளோம்” என்றார்.ஹூண்டாய் மோ்டார் நிறுவனம் கடந்த ஆண்டைவிட வாகன விற்பனை இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மின்னணு சாதனங்களின் விற்பனை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
தீபாவளியை ஒட்டி ஆன்லைன் வணிகமும் கடந்த ஆண்டைவிட 15 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. காற்று மாசு குறித்த பல்வேறு கட்டுப்பாடுகளால் பட்டாசு விற்பனை மட்டும் சரிவை சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.