நாடு முழுவதும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம்

சென்னை: ஏப். 11 -ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. காலையிலேயே புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொள்கின்றனர்.
இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ரமலான் நோன்பு இருப்பது. அதாவது இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலானில் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை கடைப்பிடிப்பார்கள். ஒரு மாதம் வரை இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் சாயங்காலம் வரை உணவு உண்பதை நிறுத்தி விரதம் இருப்பார்கள்.
இந்த காலக்கட்டத்தில் நோன்புக்கு முன்பு சஹர் என்ற உணவும், நோன்பிற்கு பிறகு மாலை நேரத்தில் இப்தார் விருந்துடன் உணவு எடுத்து கொள்வார்கள். இந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி ரமலான் நோன்பு தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். பொதுவாக ரம்ஜான் பண்டிகை என்பது வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. இதனால் பல இடங்களில் ரம்ஜான் பண்டிகையின் தேதி என்பது மாறுபடும். இந்நிலையில் தான் தமிழகத்தில் நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகைக்கான பிறை பார்க்கப்பட்டது. அப்போது பிறை தெரியவில்லை. இதையடுத்து இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அரசு தலைமை காஜி சலாவூதின் முகமது அயூப் அறிவித்தார். அதன்படி இன்று தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை களைகட்டி உள்ளது. காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொள்கின்றனர். ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் பல்லாயிரணக்காண இஸ்லாமியர்கள் பங்கேற்று வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம், தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, கடையநல்லூர், அச்சன்புதூர் உள்பட பல இடங்களில் ரம்ஜான் பண்டிகை களைகட்டி உள்ளது.
அதோடு டெல்லி உள்பட நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையிலேயே பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மசூதிகளில் கூடி கூட்டாக சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர். முன்னதாக நேற்று தமிழ்நாட்டில் சில இடங்களில் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் நேற்று முன்தினம் பிறை தெரிந்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்றும் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. இன்று 2 நாளாக தமிழ்நாட்டில் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.