நாட்டின் தற்சார்பை பொக்ரான் மீண்டும் நிரூபித்துள்ளது: மோடி கருத்து

புதுடெல்லி: மார்ச் 13
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் ‘பாரத் சக்தி’ என்ற பெயரில் முப்படையினரும் உள்நாட்டு தயாரிப்பு ராணுவத் தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தும் செயல்முறை விளக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
இதில் டி-90 பீரங்கி வாகனம்,தனுஷ் மற்றும் சாரங் பீரங்கிகள், ஆகாஷ் ஏவுகணைகள், ட்ரோன்கள், ரோபோட்டிக் ஆயுதங்கள், நவீன இலகு ரக
ஹெலிகாப்டர், தேஜஸ் போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றின் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பொக்ரானில் முப்படையினரும் காட்டிய வீரம் வியக்கத்தக்கது. வானிலும், மண்ணிலும் காட்டிய வெற்றி முழக்கம் எல்லா திசைகளிலும் எதிரொலித்தது. புதிய இந்தியாவுக்கான அழைப்பு இதுதான்.
இந்தியாவின் தற்சார்பு, தன்னம்பிக்கை மற்றும் தற்பெருமையை பொக்ரான் மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளது. இதே பொக்ரான்தான் இந்தியாவின் அணுசக்திக்கு சாட்சியாக இருந்தது. இங்கிருந்துதான் நாம்தற்போது உள்நாட்டு பலத்தை காண்கிறோம்.
பாரத் சக்தி திருவிழா, வீரம் விளைந்த ராஜஸ்தான் மண்ணில் நடைபெற்றுள்ளது. இங்கு ஏற்பட்ட குண்டு முழக்கம் இந்தியாவில் மட்டும் எதிரொலிக்கவில்லை, உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.