நாட்டின் முதல் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பலை இயக்க குஜராத் அரசு திட்டம்

புதுடெல்லி, ஜன. 1 – ஆழ்கடலில் மூழ்கியுள்ளதாக கருதப்படும் புராதண நகரான துவாரகையை சுற்றுலாப் பயணிகள் கண்டு கழிக்க குஜராத் மாநில அரசு நீர்மூழ்கிக் கப்பல் சேவையைத் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மாஸ்காவன் டெஸ்க் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை குஜராத் மாநில அரசு செய்துள்ளது.
ஹிந்து கடவுளான கிருஷ்ணரின் நகரான புனிதமான துவாரகையில் நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்குவதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலா என்பது நாட்டிலேயே முதன்முறையாகச் செயல்படுத்தப்படும் திட்டமாகும். தற்போதைய திட்டத்தின்படி 2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிக்கைக்கு முன்னதாக இந்த நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலா சேவையைத் தொடங்குவதற்கு குஜராத் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி சுற்றுலாப் பயணிகள் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து கடல் பரப்பில் இருந்து 100 மீட்டர் ஆழத்தில் கடலுக்குள் சுற்றிப் பார்த்து ரசிப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் கிருஷ்ணர் பக்தர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒவ்வொரு நீர்மூழ்கிக் கப்பலிலும் இரண்டு அனுபவமுள்ள பைலட்டுகளும் ஒரு பயிற்சி பெற்ற கப்பல் குழுவும் இருக்கும். அதில் 24 சுற்றுலாப் பயணிகள் செல்லலாம்.
அடுத்த வைப்ரன்ட் குஜராத் குளோபல் உச்சி மாநாட்டில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ திட்ட அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது. நீர்மூழ்கிக் கப்பல் வசதி துவாரகையின் சுற்றுலா சாத்தியங்களை மேம்படுத்தும் என்று அரசு எதிர்பார்க்கிறது. நம் நாட்டில் துவாரகை ஒரு பிரபலமான கோயில் நகரமாகும், இது தினமும் ஏராளமான பார்வையாளர்களை ஈர்க்கிறது. குஜராத் சுற்றுலாத்துறை நிர்வாக இயக்குனர் சௌரப் பார்தி அளித்த பேட்டியில், இந்த முயற்சி ஒரு “வித்தியாசமான திட்டம்”. இது குஜராத்தின் இந்த பகுதிக்கான பயணத்தை கணிசமாக அதிகரிக்கும் என்று கூறினார். துவாரகையின் புனித முக்கியத்துவம் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை ஈர்க்கிறது. நன்கு அறியப்பட்ட துவாரகாதீஷ் கோயிலைக் காண ஹிந்துக்கள் வெகு தொலைவில் இருந்து பயணிக்கின்றனர். புராண எழுத்துக்களின் படி, இந்த இடம் கிருஷ்ணரால் கட்டப்பட்டு நீரில் மூழ்கிய நகரமாக கருதப்படுகிறது.