நாட்டில் மீண்டும் சவாலான சூழ்நிலை


புதுடில்லி ஏப்ரல் 8-
கொரோனா தொற்று பரவலால் நாட்டில் மீண்டும் சவாலான சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும் இந்த தொற்று நோயை தடுக்க சிறிய கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்., நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துதல், தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
மாநில முதல்மந்திரிகளுடனான ஆலோசனையின் போது பிரதமர் மோடி பேசியதாவது,
சவாலான சூழ்நிலை மீண்டும் உருவாகி வருகிறது. கொரோனா பரவல் சூழ்நிலையை கட்டுப்படுத்த உங்கள் அனைவரின் ஆலோசனைகளை கொடுக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன்.
கொரோனா பரவலின் இரண்டாவது அலையை நாம் எதிர்த்து போராட வேண்டும். மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கார், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவின் முதல் அலையில் ஏற்பட்ட பாதிப்பை விட அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகவும் கவலையளிக்கும் நிலைமை. மக்கள் பதட்டமடையாமல் உள்ளனர். பல மாநில அரசுகள் கவலையின்றி மிகவும் சாதாரணமாக உள்ளன. கொரோனாவை எதிர்த்து மீண்டும் போராட தேவை ஏற்பட்டுள்ளது. அனைத்து சவால்கள் இருந்தபோதும், நம்மிடம் அனுபவமும், வளமும், தடுப்பூசியும் உள்ளது.
கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். 70 சதவிகிதம் ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்வதே நமது இலக்கு. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கட்டும், ஆனால், கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துங்கள். கொரோனா பரிசோதனை மாதிரிகளை சரியாக சேகரிப்பது மிகவும் முக்கியம். சரியான நிர்வாகம் மூலம் அது பரிசோதிக்கப்பட வேண்டும். கொரோனா பரவியவர்களை கண்டறிதலும், கண்காணித்தலுமே வைரஸ் பரவலை தடுப்பதற்கான வழிகள்’ என்றார்.