நான் தேச பக்தனா, துரோகியா என்பதை மக்கள் முடிவு செய்வர்: மைசூரு பாஜக எம்.பி

பெங்களூரு, டிச. 25- கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த மனோரஞ்சன், உத்தர பிரதேச தலைநகர் லக்னோவை சேர்ந்த சாகர் சர்மா ஆகியோர் கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையில் வண்ண புகை குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். மைசூரு-குடகு மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா, இருவருக்கும் பரிந்துரை கடிதம் (பாஸ்) அளித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.‘பாஸ்’ வழங்கியது தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா அண்மையில் விளக்கம் அளித்தார். அதில் “மனோரஞ்சனின் தந்தை எனது தொகுதியில் வசிக்கிறார். அவர் கேட்டுக் கொண்டதால்பாஸ் வழங்கினேன். பார்வையாளர்அனுமதி சீட்டு பெற்ற மனோரஞ்சன், சாகர் சர்மாவை எனக்குதெரியாது. அவர்களுக்கும் எனக்கும் தொடர்பும் கிடையாது’’ என்று அவர் தெரிவித்தார். எனினும் கர்நாடகா முழுவதும் பிரதாப் சிம்ஹாவுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கர்நாடக தலைநகர் பெங்களூருவில் அவர் நேற்று கூறியதாவது- கடந்த 9 ஆண்டுகளாக மைசூரு- குடகு மக்களுக்கு சேவையாற்றி வருகிறேன். பத்திரிகை துறையில் பணியாற்றிய நான் 20 ஆண்டுகளாக மக்களின் நலனுக்காக எழுதி வருகிறேன். நாட்டுக்காகவும் இந்து மதத்தின் மேம்பாட்டுக்காவும் அயராது பாடுபட்டு வருகிறேன். நான் தேச பக்தனா, தேச துரோகியா என்பது தேவி சாமுண்டீஸ்வரிக்கு தெரியும். வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதிமன்றத்தில் முறையிடுவேன். நான் தேச பக்தனா, தேச துரோகியா, நான் யார் என்பதை கர்நாடக மக்கள் முடிவு செய்வார்கள்.டெல்லி சென்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா சொகுசு விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
இதுகுறித்து கேட்டால் பிரதமர் எந்த விமானத்தில் பயணம் செய்கிறார் என்று வினவுகிறார். அவர் நாட்டின் ஒரே பிரதமர். ஆனால், 29 முதல்வர்கள் உள்ளனர். முதல்வர்களையும் பிரதமரையும் ஒப்பிட முடியாது. இவ்வாறு பிரதாப் சிம்ஹா தெரிவித்தார்.