நான் முதல்வராக சசிகலா காரணம் அல்ல:தமிழக முதல்வர் பேச்சு

சென்னை, ஜன. 13- தமிழக முதல்வராக சசிகலா தன்னை தேர்வு செய்ததாக கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்துள்ள முதல்வர் பழனிசாமி, அதிமுக எம்எல்ஏக்களே ஒரு மனதாக தேர்ந்தெடுத்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளித்துள்ள அவர், கட்சிக்குள் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்ட போது, தாம் முதலமைச்சராக வேண்டும் என்பதே பெரும்பாலான எம்எல்ஏக்களின் விருப்பமாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தம் மீது மிகவும் நம்பிக்கை கொண்டு இருந்தார் என்பது அமைச்சர்களுக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியும் என்றும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 1989ம் ஆண்டு ஜெயலலிதா, அதிமுக அணி சார்பில் தாம் முதன்முதலாக சேவல் சின்னத்தில் போட்டியிட்ட தருணத்தில் இருந்து அவரது மறைவு வரை கட்சிக்கு உண்மையான தொண்டனாக பணியாற்றியது அனைவரும் அறிந்த ஒன்று என்று அவர் கூறியுள்ளார்.
கட்சிக்காக பல்வேறு போராட்டங்களில் கைதாகி சிறை சென்று இருப்பதாகவும் 2021ம் ஆண்டு எடப்பாடி தொகுதி கூட்டணி கட்சியான பாமகவுக்கு ஒதுக்கப்பட்டபோதும் அதிருப்தி அடையாமல், வெற்றிக்கு பாடுப்பட்டதாகவும் பழனிசாமி கூறியுள்ளார்.கட்சிக்கும் தலைமைக்கும் அரசாங்கத்திற்கும் விசுவாசம் உள்ளவனாக இருந்த காரணத்தினால் தம் மீது நம்பிக்கை வைத்து எம்எல்ஏக்கள் முதலமைச்சராக தேர்வு செய்ததாக கூறியுள்ள அவர், சசிகலா தன்னை தேர்வு செய்ததாக கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.