நாமக்கல் கோயிலில் குடமுழுக்கு

நாமக்கல்: நவ.8- நாமக்கல் ஐயப்ப சுவாமி மற்றும் துர்க்கையம்மன் கோயில் குடமுழுக்கு விழா வரும் 10-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, தீர்த்தக் குடம், முளைப்பாரி எடுத்து பக்தர்கள் நேற்று ஊர்வலமாகக் கோயிலுக்கு வந்தனர்.
நாமக்கல் மோகனூர் சாலையில் பிரசித்தி பெற்ற ஐயப்பன், துர்க்கையம்மன் கோயில் உள்ளது. இக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, வரும் 10-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, நேற்று காலை 6 மணிக்குக் கணபதி ஹோமம் நடைபெற்றது.பின்னர் காலை 11 மணிக்கு நூற்றுக் கணக்கான பக்தர்கள் மோகனூர் காவிரி ஆற்றில் புனித நீராடி, புனித நீர் கலசங்களை எடுத்துக் கொண்டு குதிரைகள் முன்னே செல்ல பக்தர்கள் ஊர்வலமாகக் கோயிலை வந்தடைந்தனர். மாலையில் முளைப்பாரி அழைத்தல், வாஸ்து பூஜை, அங்குரார்ப் பணம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை நடைபெற்றது.
இன்று (8-ம் தேதி) காலை 9 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும் நடைபெறவுள்ளன. நாளை (9-ம் தேதி) காலை 8.30 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு 5-ம் கால யாக பூஜையும் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து, மாலை 6 மணிக்குக் கோபுர கலசம் வைத்தல் மற்றும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதழும், 10-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், 8.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து 9 மணிக்கு குடமுழுக்கும், மூலவர்களுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறும்.

இதையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை நாமக்கல் ஐயப்ப சுவாமி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்து வருகின்றனர்.