நாம் தமிழர் நிர்வாகிகளிடம் விசாரணை

சென்னை: பிப். 8: சென்னையில் உள்ள அலுவலகத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் 10 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணை நடத்தினர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே போலீஸார் கடந்த 2022மே 20-ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த பொறியாளர் சஞ்சய் பிரகாஷ், கிச்சிபாளையத்தை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி நவீன் சக்கரவர்த்தி ஆகியோரிடம் இருந்து 2 துப்பாக்கிகள், தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. செட்டிச்சாவடி பகுதியில்வீட்டை வாடகைக்கு எடுத்து யூ-டியூப் உதவியுடன் அவர்கள் துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களது கூட்டாளி அழகாபுரத்தை சேர்ந்த கபிலன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு ‘க்யூ’ பிரிவுக்கும்,பின்னர், தேசிய புலனாய்வு முகமைக்கும் (என்ஐஏ) மாற்றப்பட்டது. சிறையில் இருந்த சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோரிடம் என்ஐஏ அதிகாரிகள் 7 நாட்கள் விசாரணை நடத்தினர்.
இருவரும் தடைசெய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் என்பதும், தமிழகத்தில் அதற்கு இணையாக ஓர் அமைப்பை நிறுவி ஆயுத போராட்டம் நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களுடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் தொடர்பில் இருந்ததும் கண்டறியப்பட்டது.
வெளிநாடுகளில் வசிக்கும் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களிடம் இருந்து தமிழகத்துக்கு சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் நிதி வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கு சொந்தமான 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த 2-ம் தேதி சோதனை நடத்தினர்.