நாய்களுக்கென பிரத்யேகமாக விமான சேவை

அமெரிக்கா, மே 27- செல்லப்பிராணிகளை குடும்பத்தில் ஒருவராகவும் குழந்தைகளை போலவும் கருதி வளர்ப்பவர்கள் நாம். குறிப்பாக நாய்களுக்கு பெயர் வைத்து வீட்டின் செல்லப் பிள்ளையாகவே வளர்ப்போம். அப்படி உங்கள் செல்லப் பிள்ளையுடன் ஒரு விமானப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?.. அப்படி ஒரு அனுபவத்தை தருவதற்காக தான் பார்க் ஏர் (Bark air) என்ற ஒரு விமான சேவை நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. பார்க் ஏர் விமான நிறுவனம் , முற்றிலும் நாய்களை மனதில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நாய்களும் அவர்களது உரிமையாளர்களும் தங்களது விமான பயணத்தை மகிழ்ச்சியுடன் மேற்கொள்ளலாம். நாய்களுக்கான பொம்மை தயாரிப்பு நிறுவனமான பார்க், ஜெட் சார்ட்டர் சர்வீஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த பார்க் ஏர் நிறுவனத்தை தொடங்கியுள்ளது. பார்க் ஏர் நிறுவனத்தின் முதல் விமான சேவை அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளது. நியூயார்க் முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை, முதல் விமானம் சென்றது. முதன்முறையாக நாய்களுக்கும் மனிதர்களைப் போலவே இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. இதனால் நாய்களும் விமான பயண அனுபவங்களை பெற்றன. நாய்களை சௌகரியமாக என்ற நோக்கத்தில் தான் இப்படி ஒரு கான்செப்ட்டையே கொண்டு வந்ததாக பார்க் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இதற்காக சிந்தித்து பல முயற்சிகளை மேற்கொண்டு இந்த சேவையை கொண்டு வந்திருப்பதாக கூறியுள்ளது. இந்த முதல் விமானத்தில் தங்களது செல்லப் பிராணிகளுடன் பயணம் செய்தவர்கள் மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது என பார்க் ஏர் நிறுவனத்தை பாராட்டியுள்ளனர். பார்க் ஏர் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி நாய்களுக்கு என பிரத்யேகமாக தொடங்கப்பட்ட விமான சேவை நிறுவனம் இது. நாய்களுக்கான உணவுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் விமானத்தில் செய்யப்பட்டுள்ளன .அதேபோல எந்த வகையான நாயாக இருந்தாலும் எந்த அளவில் உள்ள நாயாக இருந்தாலும் விமானத்தில் பயணம் செய்ய முடியும் என பார்க் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைக்கு நியூயார்க் முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரையிலும் , நியூயார்க் முதல் லண்டன் வரையிலும் இரண்டு வழித்தடங்களில் விமானங்களை இயக்கி வருகிறது. கூடிய விரைவில் பல்வேறு விமான வழித்தடங்கள் இதில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு விமானத்தில் 15 நாய்கள் மற்றும் அதன் உரிமையாளர்களும் பயணம் செய்ய முடியும். இதில் அமெரிக்காவினுள் உள்நாட்டு விமானங்களுக்கு ஒரு டிக்கெட் என்பது 6000 டாலர் எனவும் வெளிநாட்டு விமானங்களுக்கு ஒரு டிக்கெட்டின் விலை 8000 டாலர் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்த வழித்தடங்களை சேர்க்கும்போது விமான கட்டண தொகை கணிசமாக குறையும் என பார்க் ஏர் நிறுவனம் கூறியுள்ளது.