நாய் கடித்து சிறுவன் சாவு: பெற்றோர் போராட்டம்

பெங்களூர் : நவம்பர். 15 –
நாய் கடித்ததால் காயமடைந்த போது சரியான தடுப்பூசி செலுத்தாததால் சிறுவன் காய்ச்சல் வந்து இறந்துள்ளான் என அவனுடைய பெற்றோர் அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியுள்ள சம்பவம் சிக்கபள்ளாபுரா மாவட்டத்தின் கௌரிபிதனூர் ஹோசூர் ஆரம்ப சுகாதார மையம் அருகில் நடந்துள்ளது. கௌரிபிதனூரு தாலூகாவின் கோடாலதின்னே என்ற கிராமத்தை சேர்ந்த பைரோஸ் மற்றும் பாத்திமா தம்பதியின் ஐந்து வயது மகன் சமீர் நாய் கடித்து இறந்த சிறுவனாவான். கடந்த அக்டோபர் 30 அன்று சமீரை நாய் கடித்துள்ளது . உடனே அவனை ஹோசூர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்து சென்று அங்கு நாய் கடிப்புக்கான தடுப்பூசி செலுத்தியுள்ளனர். நாய் கடித்த ஐந்து நாட்களுக்கு பின்னர் சிறுவனுக்கு தீவிர காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கௌரிபிதனூர் நகரின் தனியார் மருத்துவமனையில் அவனை சேர்த்துள்ளனர். பின்னர் கூடுதல் சிகிச்சைக்காக பெங்களூரின் இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் இறந்து போயுள்ளான். இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் நாய் கடிக்கு சிறுவனுக்கு சரியான தடுப்பூசி செலுத்தவில்லை . அதனால் சிறுவனின் மூளைக்கு விஷம் தாக்கி இறந்துள்ளதாக பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் மனம் நொந்த சிறுவனின் பெற்றோர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு வந்து தங்கள் மகனுக்கு அளித்த தடுப்பூசியின் விவரம் பற்றி தெரிவிக்குமாறு கேட்டும் பதிவேட்டில் சிறுவனுக்கு அளித்த தடுப்பூசி பற்றி எவ்வித பதிவும் இருக்க வில்லை . இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இறந்து போன சிறுவனின் பெற்றோர் சுகாதார மையத்தின் முன்பு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.