நாய் குரைத்ததால் உரிமையாளர் மீது தாக்குதல் பக்கத்து வீட்டில் வசிப்பவர் கைது

பெங்களூரு, மார்ச் 13:
நண்பர்களை பார்த்து நாய் குரைத்ததால் அதன் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய‌ பக்கத்து வீட்டில் வசிப்பவரை போலீசார் கைது செய்தனர்.பெங்களூரு பட்டேகார்பாளையா, முனேஷ்வர் நகரை சேர்ந்த இளம்பெண் அளித்த புகாரின்படி, பக்கத்து வீட்டில் வசிக்கும் சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளம் பெண் தனது பெற்றோருடன் வசிக்கிறார், குற்றம் சாட்டப்பட்ட சங்கர் பக்கத்து வீட்டில் வசிக்கிறார். கடந்த 7ம் தேதி இரவு, சங்கர் மற்றும் அவரது நண்பர்களுடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, ​​அவர்களைப் பார்த்து செல்ல நாய் குரைத்துள்ளது.இதனால் ஆத்திரமடைந்த சங்கரும் அவரது நண்பர்களும் நாயை தாக்கி உள்ளனர். இதை கேள்வி கேட்ட இளம்பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுடன் சங்கர் உள்ளிட்ட நண்பர்களுக்கு வாய்த் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்த இளம்பெண்ணின் தந்தையை இரும்பு கம்பியால் சங்கர் தாக்கி காயப்படுத்தி உள்ளார். அவரைத் தடுக்க வந்த இளம் பெண்ணையும் அவரது நண்பர்கள் இழுத்துச் சென்று தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.இளம் பெண் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து இது தொடர்பாக தகவல் அளித்து, போலீசார் உதவியுடன் தந்தையை உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
நடந்த சம்பவம் குறித்து இளம் பெண் மகளிர் ஆணைய தலைவருக்கு குரல் செய்தி செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து காமாட்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கரை கைது செய்தனர்.