நாளை அதிமுக பொதுக்குழு வன்முறை வெடிக்கும் அபாயம்

சென்னை, ஜூன். 22 – திட்டமிட்டபடி நாளை மறுநாள் பொதுக்குழுவை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். ராணுவ கட்டுப்பாடு கொண்ட இயக்கம் என்று வர்ணிக்கப்பட்ட அ.தி.மு.க.வில், இப்போது கோஷ்டி பூசல் வலுத்து வருகிறது. ஒற்றை தலைமை விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அசராமல் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள் ஆனால் எந்த சமரசத்திற்கும் ஓ.பன்னீர் செல்வம் ஒத்துக்கொள்ளவில்லை. ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடந்த ஒருவாரமாக மிகப் பெரிய பலப்பரீட்சை நடந்து வருகிறது. இதில் எடப்பாடி பழனிசாமி எட்டி பிடிக்க முடியாத வேகத்தில் முன்னேறி உள்ளார்.
அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவுகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட எடப்பாடி பழனிசாமியை தான் ஆதரிக்கிறார்கள். அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இதுவரை தங்களது நிலைப்பாட்டை வெளியில் சொல்லாமல் இருந்தனர். ஆனால் நேற்று முதல் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இன்று 9 வது நாளாக எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர் செல்வமும் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுக்குழு தீர்மானம் இதற்கிடையில் பொதுக்குழுவில் நிறைவேற்ற பொதுவான 23 தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டு உள்ளன. 12 பேர் கொண்ட தீர்மான குழுவினர் இதனை இறுதி செய்து இருவருக்கும் கொடுத்துள்ளனர். அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. முடக்குவது கண்டித்தும், ஆளும் கட்சியினர் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் தீர்மானங்கள் கொண்டு வரப்படுகிறது.
இது தவிர முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, காவிரி பிரச்சினை போன்ற பொதுவான பிரச்சினைக்குரிய தீர்மானங்களும் இடம்பெறுகின்றன.அதிமுக செயற்குழு – பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலுக்காக ஒப்படைக்கப்பட்டது. தீர்மானக்குழு தயார் செய்த வரைவு தீர்மானத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர்ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வழங்கினர். இந்த தீர்மானங்களை யார்-யார் முன்மொழிவது, வழிமொழிவது என்பது போன்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அடங்கிய தீர்மான குழு கொண்டு வந்துள்ள இத்தீர்மானங்கள் பொதுக்குழுவில் வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும். ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் இதில் இடம்பெறவில்லை. ஒற்றை தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானமாக கொண்டு வர எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. சட்ட விதிகள் என்ன சொல்கிறது…? இந்த நிலையில் அதிமுக சட்ட விதிகள் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம். கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில் கட்சியின் சட்ட விதி 20 திருத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின் பதவி காலம் ஐந்து ஆண்டுகளாகும். கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிட முடியும். மறைந்த முதல் அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் இடத்தை அ.தி.மு.க.வில் யாராலும் நிரப்ப முடியாது என்பதால், கட்சியின் பொதுச்செயலாளர் என்ற பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக விதி எண் 43ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 11ன் படி பொதுச் செயலாளருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் மூலம் வங்கி கணக்குகள், தேர்தலுக்கு வழங்கப்பட வேண்டிய பார்ம் ஏ, பார்ம் பி ஆகியவற்றில் கையெழுத்திடும் அதிகாரம் மேற்கண்ட இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து கையெழுத்திட்டால் மட்டுமே இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த முடியும். தொண்டர்களின் முடிவே அ.தி.மு.க.வின் எதிர்காலம் அ.தி.மு.க. விதி எண் 20ல் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு போட்டியிடுபவர்கள் கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பயணித்திருக்க வேண்டும். இவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். விதி எண் 20ன் உட்பிரிவு 3ன் படி மேற்கண்ட இருவரும் இணைந்து முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதே விதி எண் கீழுள்ள பிரிவு 6ன் படி அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், அவைத் தலைவர், பொருளாளர், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நியமன உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்டு இருவரும் இணைந்து தலைமைச் செயற்குழுவை அமைப்பர். இப்படி தேர்வாகும் தலைமை செயற்குழுவின் காலம் 5 ஆண்டுகளாகும். ஒருவேளை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் அல்லது இணை ஒருங்கிணைப்பாளர் விடுவிக்கப்பட்டால், இந்த பொறுப்பிற்கு புதிய நபர் தேர்வாகும் வரை , முந்தைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் கட்சியை வழி நடத்துவர். சட்ட விதிமுறைகள் ஒரு பக்கம் இருந்தாலும், பெரும்பாலான தொண்டர்களின் முடிவே அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. இரட்டை தலைமைக்கு உருவாக்கப்பட்ட விதிகளை நீக்க முடிவு? இந்நிலையில் இரட்டை தலைமைக்கு உருவாக்கப்பட்ட விதிகளை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் – எடப்பாடி பழனிசாமி இணைப்புக்கு பிறகு 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரட்டை தலைமை தொடர்பான சட்ட விதிகளை நீக்கிவிட்டு, எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. இருந்தபொழுது இருந்த விதிகளை அமல்படுத்த இபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் பொதுக்குழுவில் இப்போது கிடைத்த தகவல்கள் அனைத்தும் உறுதிபடுத்தப்படுமா என்பது தெரிய வரும்.