நாளை உருவாகும் புயல்

சென்னை: டிசம்பர் 2: வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி, வடதமிழக கடலோரப் பகுதிகளில் வரும் 4-ம் தேதி நிலவக்கூடும். இது 5-ம் தேதி காலை நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும். அப்போது, அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலைகொண்டுள்ளது. இது நாளை (டிச.3) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற்று, 4-ம் தேதி தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி, வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும். 5-ம் தேதி காலை ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கக்கூடும். அப்போது அதிகபட்சமாக 100 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று (டிச.2) முதல்3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.