நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம்

சென்னை: பிப். 15:விவசாயிகள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும், விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய பிப்.16 வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகத்தை சேர்ந்த 15 அமைப்புகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
மக்களே முதன்மை அமைப்பின் தலைவர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயம், ஒருங்கிணைப்பாளர் தாமஸ் பிராங்கோ, தமிழ்நாடு பொதுமேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 15 அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
டெல்லியை நோக்கி கோரிக்கை பேரணி நடத்தும் விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதும், ரப்பர் புல்லட்டால் தாக்குவதும், சாலையை மறிப்பதும், கைது செய்வதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தி ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு, சாகுபடிக்கான அடக்க விலையுடன் 50 சதவீதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் பிப்.16-ம்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள 15 அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.