பெங்களூரு, செப். 25-
காவேரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை கண்டித்து பெங்களூரில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது இதனால் நகர முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விடுவது தொடர்பான காவிரி நதிநீர் விவகாரத்தால் பெங்களூரு, ராம்நகர் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விடுவது தொடர்பான காவிரி நதிநீர் விவகாரத்தால், பெங்களூரு உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
கர்நாடக நீர் பாதுகாப்புக் குழு செப்டம்பர் 26 (செவ்வாய்க்கிழமை) பெங்களூரு முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது மற்றும் 90 க்கும் மேற்பட்ட அமைப்புகள் தங்கள் ஆதரவை அறிவித்துள்ளன. மேலும் ராம்நகர் மாவட்டம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள மத்தூர், மலவள்ளி தாலுகாக்களில் முழு அடைப்பு நடத்த உள்ளாட்சி அமைப்புகள் முடிவு செய்துள்ளன. பெங்களூரில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடத்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.
செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு திரும்பப் பெற சில அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. நாட்டு மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி முழு அடைப்பு நடத்தப்பட உள்ளது, முழு அடைப்பை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. முழு அடைப்பு வெற்றி பெறுவதன் மூலம் விவசாயிகள் தங்கள் வேதனையை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவிப்பார்கள் என ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
பெங்களூரு டவுன்ஹாலில் இருந்து காலை 11 மணிக்கு போராட்ட பேரணி தொடங்குகிறது. திரைப்பட வர்த்தக சபை உறுப்பினர்கள், கன்னட அமைப்புகளின் தலைவர்கள், விவசாயிகள், ஆம் ஆத்மி கட்சியினர், பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள், கேஎஸ்ஆர்டிசி கன்னட தொழிலாளர்கள் சங்கம், ஓலா, ஊபர் டிரைவர்கள் சங்கம், தனியார் போக்குவரத்து சங்கங்களின் சங்கம், கர்நாடகா மராட்டிய மண்டல், மாநில தொழிலாளர் கவுன்சில் உறுப்பினர்கள் பேரணியில் பங்கேற்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பேருந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதால், பிஎம்டிசி பஸ்களை இயக்க வேண்டாம் என கேஎஸ்ஆர்டிசி ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. ஆட்டோ, கேப் போக்குவரத்து இருக்காது. கர்நாடக தொலைக்காட்சி கலைஞர்கள் சங்கம் படப்பிடிப்பை நிறுத்த முடிவு செய்துள்ளது.
ராம்நகரிலும் காலை முதல் மாலை 5 மணி வரை மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு நடைபெறும். மருத்துவமனை, மருந்து கடைகள், போக்குவரத்து அமைப்பு, பட்டுக்கூடு சந்தை போன்ற அவசர சேவைகள் தவிர அனைத்தும் மூடப்படும் என தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் ‘முக்கியமந்திரி’ சந்துரு கூறுகையில், ‘அமைதியான முழு அடைப்பு நடத்துவோம். சிறப்பு அமர்வை உடனடியாக கூட்டி, மத்திய அரசு மற்றும் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை எச்சரித்து, கோரிக்கையை நிறைவேற்றும் வரை காவிரியில் தண்ணீர் திறக்க மாட்டோம் என எச்சரித்தார்.
மாநில கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் குருபுரு சாந்தகுமார் கூறியது: நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் முழு அடைப்பு பற்றி மெத்தனமாக பேசியுள்ளார். அவர்களின் அதிகாரம் நிரந்தரமானது அல்ல. மேக்கேதாட்டு பிரச்னையை எதிர்த்துப் போராடி ஆட்சிக்கு வந்தார்கள். இப்போது அவர்கள் மௌனம் காப்பது சரியல்ல என்றார்.