நாளை மறுவாக்குப்பதிவு

மணிப்பூர் ஏப். 29- மணிப்பூரில் நாளை 6 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிப்பூரில் முதற்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.
மணிப்பூரில் உள் மணிப்பூர், வெளி மணிப்பூர் என 2 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் உள் மணிப்பூர் மக்களவைத் தொகுதியில் முழுமையாகவும், வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 15 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக வெளி மணிப்பூரில் மீதமுள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது 6 வாக்குச் சாவடிகளில் இடையூறு நிகழ்ந்த நிலையில் அங்கு வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. வாக்குப் பதிவு நிறுத்தப்பட்ட 6 வாக்குச் சாவடிகளில் ஏப்ரல் 30-ம் தேதி மறுவாக்குப் பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.
இதன்படி, நாளை அந்த 6 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மணிப்பூரில் சமவெளி பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினருக்கும் மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி-சோ பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம்மோதல் ஏற்பட்டு, இனக்கலவரமாக வெடித்தது. இந்தக் கலவரத்தில் 210-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.
இந்நிலையில், கடந்த 19-ம் தேதி மணிப்பூரில் வாக்குப் பதிவு நடைபெற்றபோது, துப்பாக்கிச்சூடு, வாக்குச் சாவடிகளை கைப்பற்றும் முயற்சி, மின்னணு இயந்திரங்கள் உடைப்புஎன வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதனால், 11 வாக்குச் சாவடிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது. அங்கு மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.