நாளை முதல் தமிழக முதல்வர் சூறாவளி பிரச்சாரம்

சென்னை:மார்ச் 21:
மக்களவைத் தேர்தலுக்கான 20 நாட்கள் பிரச்சாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சியில் தொடங்குகிறார்.
தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ‘இண்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கும் பணியை வரும் 22-ம் தேதி (நாளை) தொடங்குகிறார். அதன்படி, வரும் 22-ம் தேதி திருச்சி, பெரம்பலூர், 23-ல் தஞ்சை, நாகை, 25-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, 26-ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், 27-ல் தென்காசி, விருதுநகர், 29-ல் தருமபுரி, கிருஷ்ணகிரி, 30-ம் தேதி சேலம், கள்ளக்குறிச்சி, 31-ம் தேதி ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய தொகுதிகளில் முதல்வர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
மேலும் ஏப்ரல் 2-ம் தேதி வேலூர், அரக்கோணம், 3-ல் திருவண்ணாமலை, ஆரணி, 5-ல் கடலூர், விழுப்புரம், 6-ம் தேதி சிதம்பரம், மயிலாடுதுறை, 7-ம் தேதி புதுச்சேரி, 9-ம் தேதி மதுரை, சிவகங்கை, 10-ம் தேதி தேனி, திண்டுக்கல், 12-ல் திருப்பூர், நீலகிரி, 13-ல் கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் முதல்வர் பிரச்சாரம் செய்கிறார்.
அதேபோல் ஏப்ரல் 15-ம் தேதி திருவள்ளூர், வடசென்னை, 16-ல் காஞ்சிபுரம், பெரும்புதூர், 17-ம் தேதி தென்சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கவுள்ளார்.
முதல்வர் பிரச்சாரத்துக்கு குறித்த நேரத்துக்குள் செல்ல வேண்டியுள்ளதால், வழியில் வேறு எவ்வித நிகழ்ழ்சிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று திமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.