நாளை முதல் போக்குவரத்து அபராத தொகை செலுத்தினால் 50 சதவிகிதம் தள்ளுபடி

பெங்களூரு, மார்ச் 3- போக்குவரத்து விதிமீறல் வழக்குகளுக்கான அபராதத் தொகையில் 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கி அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறி அபராதம் நிலுவையில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கிய மாநில அரசு, தற்போது மீண்டும் இந்த திட்டத்தை அனுமதித்துள்ளது. நாளை முதல் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
காவல் துறையின் போக்குவரத்து இ-சலானில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலுவையிலுள்ள வழக்குகளின் அபராதத் தொகையில் 50 சதவிகிதம் ஒருமுறை தள்ளுபடி வழங்கப்படும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. .
பிப்ரவரி 11, 2023க்கு முன் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கு மட்டுமே இது பொருந்தும். சட்டத்துறை மற்றும் நிதித்துறையின் ஒப்புதலுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என போக்குவரத்து துறை உத்தரவில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அபராதம் செலுத்த 50 சதவிகிதம் தள்ளுபடியுடன் பிப்ரவரி 11 வரை 15 நாட்களுக்கு அனுமதிக்கப்பட்டது. இந்த சலுகைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் சில அபராதங்களை செலுத்த முடியவில்லை. இதனால், தள்ளுபடி அபராதம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது குறிப்பிடத்தக்கது
கர்நாடகா ஒன் இணையதளத்தில் விவரங்களைப் பெற்று அபராதத்தைச் செலுத்தலாம். பேடிஎம் செயலி மூலம் பணம் செலுத்தலாம். அருகிலுள்ள போக்குவரத்து காவல் நிலையத்தில் வாகன பதிவு எண் விவரங்களை அளித்து அபராதம் செலுத்தி ரசீது பெறலாம்.