நிகில் குப்தா போதை கடத்தல் ஆசாமி

புதுடெல்லி: டிசம்பர் 2: அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள இந்தியர் நிகில் குப்தா சர்வதேச போதைப் பொருள் கடத்தல் ஆசாமி என தெரியவந்துள்ளது.
நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் தலைவர் குர்பந்வந்த் சிங் பன்னுன். காலிஸ்தான் தீவிரவாதியான இவர் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி. அமெரிக்க மற்றும் கனடா குடியுரிமை பெற்றுள்ள இவர் தற்போது நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். இவரை கொலை செய்ய நடந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும், இதில் இந்திய அதிகாரி ஒருவருக்கும், நிகில் குப்தா என்ற இந்தியருக்கும் தொடர்பு உள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறியிருப்பதாவது:
அமெரிக்க குடிமகன் குர்பந்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய இந்தியாவில் இருந்து சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இது குறித்து சிசி-1 என்ற ரகசிய குறியீட்டுடன் அழைக்கப்படும் இந்திய அதிகாரி, நிகில் குப்தா என்ற இந்தியரிடம் தொலைபேசி மற்றும் மின்னுணு முறையில் கலந்துரையாடியுள்ளார். குர்பந்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய கூலிப்படை நபரை ஏற்பாடு செய்யும்படி நிகில் குப்தாவிடம் கூறுகிறார். நிகில் குப்தா மீது இந்தியாவில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் ஆசாமி. குர்பந்வந்த் சிங் பன்னுனை கொலை செய்தால், நிகில் குப்தா மீதான வழக்குகளை ரத்து செய்ய உதவுவதாக இந்திய அதிகாரி உறுதியளித்துள்ளார்.