நிக்கோலஸ் பூரன் விளாசலில் மே.இ.தீவுகள் அபார வெற்றி

செயின்ட் லூசியா, ஜூன் 19- ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடரின் கடைசிலீக் ஆட்டத்தில் நேற்று ‘சி’ பிரிவில் உள்ள மேற்கு இந்தியத் தீவுகள் -ஆப்கானிஸ்தான் மோதின. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இந்தஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் 5 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. டி 20 உலகக் கோப்பைவரலாற்றில் மேற்கு இந்தியத் தீவுகளின் அதிகபட்ச ரன்குவிப்பாக இது அமைந்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 53பந்துகளில், 8 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் விளாசினார். ஜான்சன் சார்ல்ஸ் 27 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 43 ரன்களும், ஷாய்ஹோப் 25 ரன்களும், கேப்டன் ரோவ்மன் பொவல் 26ரன்களும் சேர்த்தனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது முதல் 6 ஓவர்களையும், கடைசி 5 ஓவர்களையும் குறிவைத்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. அந்த அணிபவர்பிளேவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் குவித்தது. இதன் மூலம் டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் பவர்பிளேவில் அதிக ரன் வேட்டையாடிய அணி என்ற சாதனையை மேற்கு இந்தியத் தீவுகள் படைத்துள்ளது.
இதற்கு முன்னர் 2014-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணிபவர்பிளேவில் 91 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது. இதை தற்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணி முறியடித்துள்ளது. அஸ்மதுல்லா ஓமர்ஸாய் வீசிய 4-வது ஓவரில் 36 ரன்கள் விளாசப்பட்டன. இதில் நிக்கோலஸ் பூரன் 3சிக்ஸர்களையும், 2 பவுண்டரிகளையும் விளாசியிருந்தார். வைடுவாயிலாக ஒருபவுண்டரியும், லெக் பைஸ்வாயிலாக 4 ரன்களும் சேர்க்கப்பட்டிருந்தன. சர்வதேச டி 20 போட்டிகளில் ஓரே ஓவரில் 36ரன்கள் விளாசப்படுவது இது 5-வது நிகழ்வாகும். ரஷித்கான்வீசிய 18-வது ஓவரிலும் நிக்கோலஸ் பூரன் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசி அசத்தினார். இரு பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் அவர், துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதனால் சதம் அடிக்கும் வாய்ப்பு பறிபோனது. கடைசி 5 ஓவர்களில் மேற்கு இந்தியத் தீவுகள் 70 ரன்கள் சேர்த்தது.ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் குல்பாதின் நயிப் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். 219 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக இப்ராகிம் ஸத்ரன் 38,அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 23, ரஷித் கான் 18,கரிம் ஜனத் 14 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் சார்பில் ஓபேட் மெக்காய் 3 விக்கெட்களையும் அகீல் ஹோசைன், குடகேஷ்மோதி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி மேற்கு இந்தியத் தீவுகள் அணி 8 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்துடன் லீக் சுற்றை நிறைவு செய்தது. இரு அணிகளுமே சூப்பர் 8 சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றிருந்ததால் இந்த ஆட்டத்தின் முடிவு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சூப்பர் 8 சுற்றில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்துடன் நாளை (20-ம் தேதி) மோதுகிறது. இதே நாளில் ஆப்கானிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது.