நிதிஷ் குமாருடன் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு

பாட்னா: செப்.15-
பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நேற்றிரவு திடீரென பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இதற்குமுன் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.
அதன்பின் 2015 ஆம் ஆண்டு நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், ஜேடியு, ஆர்ஜேடி சேர்ந்த மகா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற வைத்தார். அந்தத் தேர்தல் முடிந்தபின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்து அந்த கட்சியின் துணைத் தலைவராகினார்.
ஆனால், கட்சியின் தலைவரும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே உரசல் ஏற்பட்டதையடுத்து, அந்தக் கட்சியிலிருந்து கடந்த ஆண்டு பிரசாந்த் கிஷோர் விலகினார்.மே.வங்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர் பின்னர் காங்கிரஸில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இணையவில்லை. அதன் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியையும், நேரு குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
சமீபத்தில் நிதிஷ் குமார் பாஜக கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக அவரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் பிரசாந்த் கிஷோர்.