நிதிஷ் முதல் ஆட்டம் – லாலு கட்சி சபாநாயகரை நீக்க கோரி நோட்டீஸ்

பாட்னா, ஜன. 29: பீகார் சட்டசபை சபாநாயகரான லாலுவின் ஆர்ஜேடி கட்சி ஆவாத் பிகாரி சவுத்ரியை பதவி நீக்கம் செய்யக் கோரி முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ, அதன் புதிய கூட்டணி கட்சியான பாஜக எம்.எல்.ஏக்கள் நோட்டீஸ் கொடுத்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் 2020 சட்டசபை தேர்தலில் பாஜக- நிதிஷ்குமார் ஜேடியூ வென்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் 2022-ல் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார் நிதிஷ்குமார். இதனைத் தொடர்ந்து லாலுவின் ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து நிதிஷ்குமார் மீண்டும் முதல்வரானார். தற்போது ஆர்ஜேடி-காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ்குமார் நேற்று தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
4 ஆண்டுகளில் 3-வது முறையாக நேற்று மாலை பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வரானார் நிதிஷ்குமார். பீகாரில் நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றது 9-வது முறையாகும். தற்போது பாஜக-நிதிஷ்குமாரின் ஜேடியூ புதிய ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக பீகார் சட்டசபை சபாநாயகராக உள்ள லாலுவின் ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த ஆவாத் பிகாரி சவுத்ரியை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளது. ஆவாத் பிகாரி சவுத்ரிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை பாஜக, நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி எம்.எல்.ஏக்கள் கொடுத்துள்ளனர்.
பீகார் சட்டசபையில் தற்போது பாஜக- ஜேடியூ கூட்டணிக்கு மொத்தம் 128 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 112 எம்.எல்.ஏக்கள். ஆர்ஜேடி- காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணிக்கு மொத்தம் 114 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. தற்போது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் பீகார் சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து தமக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.