நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை

வாஷிங்டன்: மார்ச் 30: அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரரும் தொழிலதிபருமான சாம் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிரிப்டோ கிங் என அழைக்கப்பட்ட சாம் பேங்க்மேன் ஃபிரைடு அமெரிக்காவிலேயே மிகப்பெரிய நிதி மோசடியை நிகழ்த்தியவராக கருதப்படுகிறார். 31 வயதான சாம் பேங்க்மேன் ஃபிரைடு கிரிப்டோகரன்சி, டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைகள் மூலம் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து 8 பில்லியன் டாலர்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இது தொடர்பான விசாரணையை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். நிதி மோசடி குற்றச்சாட்டுகளில் சிக்கிய சாம் பேங்க்மேன் ஃபிரைடு குற்றவாளி என அண்மையில் நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தண்டனை விவரங்கள் வெளியாகி உள்ளன.GoodReturns கடந்த 2019 ஆம் ஆண்டு முன்னாள் வால் ஸ்ட்ரீட் வர்த்தகரான சாம் பேட்மேன் ஃபிரைடு மற்றும் முன்னாள் கூகுள் ஊழியர் கேரி ஆகியோர் இணைந்து எஃப்டிஎக்ஸ்.காம் என்ற கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளத்தை நிறுவினர். குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சியை கண்டது இந்த நிறுவனம், உலகின் இரண்டாவது பெரிய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனமாக மாறியது. இந்த நிலையில் இதன் நிறுவனர் சாம் பேங்க்மேன் ஃபிரைடு, வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்தும், பரிவர்த்தனைகளில் இருந்தும் பணத்தை மறைமுகமாக திருடி வெளிநாட்டில் தனது பெயரில் இருக்கும் கணக்குகளில் ரகசியமாக மாற்றினார். இந்த மாபெரும் மோசடியில் டெக் பணிகளை செய்தது ஒரு இந்தியர் என்பது முக்கியமான விஷயம். சாம் பேங்க்மேன் ஃபிரைடு செய்த பல்வேறு நிதி மோசடி மற்றும் பண மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், அடுத்தடுத்து இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தன்னுடைய 32 பில்லியன் டாலர் மதிப்பிலான FTX நிறுவனம் திவால் ஆனதாக அறிவித்தார், மேலும் நிறுவன பொறுப்புகளில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இவரது நிறுவனம் கிரிப்டோ கரன்சி மற்றும் பிட் காயின்கள் போர்வையில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதனால் இந்த நிறுவனம் வீழ்ந்த நிலையில் அதன் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டமடைந்தனர். இந்த மோசடி அமெரிக்க வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய நிதி மோசடியாக அறியப்படுகிறது. இந்நிலையில் கிரிப்டோ கிங் என அழைக்கப்பட்ட பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் வீழ்ச்சி அடைந்தது தொடர்பாக ஏழு குற்றச்சாட்டுகளில் இவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார் . நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதத்தின் போது வாடிக்கையாளர்கள் தன்னால் எந்த ஒரு இழப்பையும் சந்திக்கவில்லை என முதலில் கூறிய பேங்க்மேன் பின்னர் அதனை ஒப்புக் கொண்டார். தவறு என தெரிந்தே பேங்க்மேன் அதனை செய்துள்ளார், தான் ஒரு குற்றவாளி என அவருக்கு தெரியும், ஆனால் அவரது ஒப்புக்கொள்ள மாட்டேன் என கூறுகிறார் என நீதிபதி கப்பலான் தெரிவித்தார்.