நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்

புதுடெல்லி ஆகஸ்ட் . 12 – பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசின் மீதும், பிரதமர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அப்போது, இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக உறுப்பினர் கனிமொழி கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “மணிப்பூர், ராஜஸ்தான், டெல்லி என எங்கும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஆனால் அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது” என்றார். அப்போது, 1989 ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த சம்பவத்தை நிர்மலா சீதாராமன் நினைவு கூர்ந்து பேசியிருந்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தி.மு.க. குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ்அப் வரலாற்றைப் படித்துவிட்டுப் பேசுவார். ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அது அவராக நடத்திக் கொண்ட நாடகம் என்பதை அப்போது அவையில் இருந்த அனைவரும் அறிவார்கள். முன்னதாகவே தனது போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்று முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு சட்டமன்றத்திலேயே பேசியது அவைக்குறிப்பில் உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது என கூறியுள்ளார்.