நிர்மலா சீதாராமன் பெயரில் மோசடி

பெங்களூரு, பிப்.9-
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கித் தருவதாக கூறி பெண் ஒருவர் பலரிடம் மோசடி செய்த சம்பவம் நகரின் புறநகர் பகுதியான ஆனேக்கல் தாலுகாவில் நடந்துள்ளது. தமிழ்நாடு, ஓசூரைச் சேர்ந்த பவித்ரா. இவர் புளூ விங்ஸ் என்ற பெயரில் அறக்கட்டளை அமைத்து, பலரை ஏமாற்றியுள்ளதாக, ஊரக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ரிசர்வ் வங்கியிடம் இருந்து அறக்கட்டளைக்கு 17 கோடி பணம் பெற்றதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையெழுத்தை போலியாக காட்டி சந்தாப்புரா, அத்திப்பள்ளி, ஓசூர், தருமபுரி உள்ளிட்ட பல இடங்களில் நூற்றுக்கணக்கான நபர்களை ஏமாற்றியுள்ளார்.
ஒருவருக்கு 10 லட்சம் கடன் கொடுத்தால், ஐந்து லட்சம் தள்ளுபடி தருவதாக நம்பி, பணத்தாள்கள் அடங்கிய வீடியோக்களை அனுப்பி மக்களை ஏமாற்றி உள்ளார் பவித்ரா. கடன் வாங்க வேண்டும் என்றால் முதலில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்று பவித்ரா கூறியுள்ளார். இதை நம்பிய பலர் பவித்ராவிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ள‌னர். சிலர் கடன் வாங்கி பணம் கொடுத்துள்ளனர்.
ஆனால், சில மாதங்களாகியும் கடன் கிடைக்காததால், பவித்ராவின் மோசடி அம்பலமானது. மோசடி தொடர்பாக பவித்ரா, அவருக்கு உதவியாக இருந்த‌ பிரவீன், எல்லப்பா, ஷீலா, ருக்மணி, ராதா, மம்தா, நேருஜி, சரத்குமார், சதீஷ், மஞ்சுளா, ஹால்பர்ட் மார்ட்டின், ஹேமலதா, ஷாலினி ஆகியோர் மீது சூர்யநகர், அத்திப்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடி தொடர்பான வழக்கை விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று ரூரல் எஸ்பி மல்லிகார்ஜுன பாலதாண்டி தெரிவித்தார்.

வீடியோவில் காட்டப்பட்டுள்ள பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

 அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கியின் பெயரில் அப்பாவி மக்களிடம் மோசடி

* ஓசூரைச் சேர்ந்த பவித்ரா கும்பலின் மோசடி

* 10 லட்சம் கடனில் 5 லட்சம் தள்ளுபடி

* பவித்ராவின் வசீகரத்தில் ஏமாந்த பொதுமக்கள்.

* பணத்தை இழந்துவர்கள் புலம்பல்

* நடவடிக்கைக்காக சிறப்பு போலீஸ் படை அமைத்தல்