நிர்மலா சீதாராமன் விமர்சனம்

புதுடெல்லி: மார்ச் 27: அடல் பென்ஷன் திட்டம் (ஏபிஒய்)மிகவும் மோசமாக வடிவமைக்கப் பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். மேலும், அது ஒரு காகிதப் புலியாக மட்டுமே உள்ளது என்றும் அதனால் சந்தாதாரர்களுக்கு எந்தவித பயனுமில்லை என்றும் கூறியிருந்தார்.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் வலைதளத்தில் அளித்துள்ள பதில்: நல்ல ஓய்வூதிய திட்டத்தை வடிவமைப்பதற்கான அடிப்படை கொள்கை என்ன என்பது ஜெய்ராம் ரமேஷுக்கு தெரியவில்லை. அடல்பென்ஷனில் உள்ள நல்ல பயன்களை மறைக்க சூழ்ச்சியான வார்த்தைகளை அவர் பயன்படுத்துகிறார். உண்மையில் அவர் ஏழைகள் பயன்பெறுவதை விரும்பவில்லை.
ஏபிஒய் திட்டத்தில் சந்தாதாரர் விலகும் வரை பிரீமியம் பேமண்டை தொடரும் வகையில் சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பலரை சரியான முடிவு எடுக்கவும், சேமிக்கவும் தூண்டுகிறது.
இத்திட்டத்தில் குறைந்தபட்சம் வருமானம் 8 சதவீதமாக இருக்கும். இதற்கு மத்திய அரசு உத்தரவாதமளிக்கிறது. அதிக முதலீட்டு வருமானம் பெறப்பட்டால் சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.