நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்த சந்திராயன் 3

சென்னை,ஆக.5-
சந்திராயன் 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக சென்றது.
நிலவு குறித்த ஆய்வில், அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் முன்னிலையில் இருந்து வருகிறது. 2008-ம் ஆண்டு சந்திரயான்-1, 2019-ம் ஆண்டு சந்திரயான்-2 ஆகிய விண்கலங்களை நிலவு ஆராய்ச்சிக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ அனுப்பியது. இதுவரை எல்லா நாடுகளும் நிலவின் வடதுருவ பகுதியில்தான் ஆய்வு மேற்கொண்டிருக்கின்றன. தென்துருவத்தை ஆராயும் பணியை யாரும் தொடங்காத நேரத்தில், இந்தியா சந்திரயான்-2-ஐ நிலவின் தென்துருவ பகுதிக்கு அனுப்பியது. ஆனால், நிலவில் குறிப்பிட்ட பகுதியில் தரையிறங்கியபோது, லேண்டர் கருவி வேகமாக மோதி உடைந்தது. அதே நேரத்தில், விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு, தற்போதும் அது செயல்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் 4 ஆண்டு கால இடைவிடாத முயற்சியின் பயனாய், மீண்டு எழுந்து மீண்டும் சந்திரயான்-3 என்ற விண்கலத்தை உருவாக்கி, கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி நிலவின் தென்துருவ பகுதிக்கு அந்த விண்கலம் பயணத்தை தொடங்கி இருக்கிறது. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது. இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லபட்டு வருகிறது. ஏற்கனவே 5 கட்டங்களாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது. சந்திரயான் 3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை கடந்த ஜூலை 30ம் தேதி நிறைவு செய்தது. சந்திராயன்-3 பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடர ஆரம்பித்துள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி நள்ளிரவு 12.05 முதல் சந்திரயான் 3 விண்கலம் புவிவட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் தள்ளுவதற்கான உந்து விசை செலுத்தப்பட்டது. இந்த நிலையில், லூனார் ஆர்பிட் இன்ஜெக்ஷன் இன்று இரவு சுமார் 7 மணிக்கு நடைபெற்றது. அதன்படி, நிலவின் ஈர்ப்பு விசையில் தற்போது சந்திரயான் 3 விண்கலம் உள்ளது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவிற்குள் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.