நீட், நெட் தேர்வு வினாத்தாள் கசிவு: நான்கு கட்டங்களாக விசாரிக்கும் சிபிஐ

புதுடெல்லி: ஜூன் 25 நீட் மற்றும் நெட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் குறித்த வழக்குகளை சிபிஐ நான்கு கட்டங்களாக விசாரிக்க உள்ளது. மேலும் ஆதாரங்களை திரட்டுவதற்கு பிஹாருக்கும் குஜராத்தின் கோத்ராவுக்கும் குழுக்களை அனுப்பியுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் வழக்கத்துக்கு மாறாக 67 மாணவர்கள் முதலிடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பிஹாரில் நீட் தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாளை கசியத் செய்ததாக மாணவர்கள் உள்ளிட்ட சிலரை போலீஸார் கைது செய்தனர்.
அடுத்த சில நாட்களில் யுஜிசி- நெட் தேர்வில் வினாத்தாள் கசிவுக்கான முகாந்திரம் இருப்பதாக கூறி இத்தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. மாணவர்கள், எதிர்க்கட்சியினரின் போராட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்தை தொடர்ந்து இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க மத்திய கல்வி அமைச்சகம் பரிந்துரை செய்தது.சிபிஐ கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரணையை ஏற்றுக்கொண்டு, அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்தது. இந்நிலையில் நீட் மற்றும் நெட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் குறித்த வழக்குகளை சிபிஐ நான்கு கட்டங்களாக விசாரிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: இந்த விசாரணை நான்கு கட்டங்களாக நடைபெறும். வினாத் தாள்களை உருவாக்குவது மற்றும் அச்சிடுவது முதல் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் விநியோகிப்பது வரை ஒவ்வொரு அம்சமும் ஆய்வு செய்யப்படும்.
இந்தத் தேர்வுகளை நடத்தி வரும் தேசிய தேர்வு முகமை, வினாத் தாளின் ரகசியத் தன்மையை பேணுவதற்கான கடுமையான நெறிமுறைகளைக் கொண்டுள்ளது. இந்த நெறிமுறைகள் எங்கு மீறப்பட்டாலும் அது கவலைக்குரிய விஷயமாகும்.
வினாத் தாள்களை தயாரித்தல், அச்சிடுதல், அவற்றை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லுதல், தேர்வு தொடங்கும் வரை அவற்றை பத்திரமாக வைத்திருத்தல் ஆகிய நடைமுறைகளில் நேரடியாக ஈடுபடும் நபர்கள் மீதும் சிபிஐ அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். ஏனெனில் இந்த நடைமுறைகளில் நெறிமுறை மீறலுக்கான சாத்தியம் இருப்பதாக சிபிஐ கருதுகிறது.முந்தைய விசாரணைகளின் போது தொகுக்கப்பட்ட 1,000 பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களின் தரவுத்தளத்தை பயன்படுத்தி, வினாத்தாள் கசிவுகளுடன் தொடர்புடையவர்களை கண்டறிய சிபிஐ முயன்று வருகிறது.