நீதி பரிபாலனத்தின் அடித்தளம் வழக்கறிஞர்கள் – நீதிபதி சுந்தர் பெருமிதம்

சென்னை: அக்.24-
’’வழக்கறிஞர்கள் தான் நீதிபதிகளாக பணியாற்றுகின்றனர். எனவே, நீதி பரிபாலனத்தின் அடித்தளமே வழக்கறிஞர்கள் தான்,’’ என, மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பெறுப்பேற்றுள்ள எம்.சுந்தருக்கு, சென்னையில் நேற்று பாராட்டு வழா நடந்தது. விழாவில், அவர் பேசியதாவது:நீதிபதியாக தகுதி பெற, தனியே பாடத்திட்டம் எதுவும் இல்லை. வழக்கறிஞர்கள் தான் நீதிபதிகளாக பணியாற்றுகின்றனர்.எனவே, நீதி பரிபாலனத்தின் அடித்தளமே வழக்கறிஞர்கள் தான். சென்னை உயர் நீதிமன்றத்தில், நான் நீதிபதியாக இருந்தபோது, சில வழக்குகளில் கடுமையாக நடந்து கொண்டிருக்கலாம். சில சமயங்களில் சிலரிடம் கடினமாக பேசியிருக்கலாம். அதை தனிப்பட்ட விமர்சனமாக எடுத்து கொள்ளாமல், நீதித்துறை அமைப்பின் மரியாதையாகவும், எனது உண்மையான அக்கறையாகவும், நீங்கள் கருத வேண்டும்.சென்னை உயர் நீதிமன்றம் மிகச் சிறந்த பாரம்பரியம் கொண்டது. இங்கிருந்து எங்கே சென்றாலும் மதிப்பு பெறுவீர். உங்களின் ஒழுக்கம், சட்ட அறிவு மற்றும் உயர்ந்த நடைமுறைகள் வாயிலாக, மக்கள் உங்களை பாராட்டுவர்.எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்ணியத்தையும், மரியாதையையும், எப்போதும் காக்க வேண்டும். இன்று இளம் வழக்கறிஞர்களாக இருப்போர், நாளை நீதிபதியாக மாறுவர். ஒவ்வொரு வழக்கறிஞரின் அலுவலகமும், ஒரு பயிலகமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.