நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, ஆக.28-
அங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் 2023 போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில், இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். அவர் போட்டியின் முடிவில், உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தனக்கான மற்றும் இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அவர் எக்சில் (முன்பு டுவிட்டர்) வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ஈட்டி எறிதலில் திறமை வாய்ந்த நீரஜ் சோப்ரா தனிச்சிறப்பான நிலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள் என பதிவிட்டு உள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் சுற்று போட்டியின்போது, பின்லாந்து நாட்டின் ஆலிவர் ஹெலாந்தர் 83.38 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து முன்னிலை பெற்றார்.
முதல் சுற்றில் சோப்ரா தவறிழைத்தபோதும், 2-வது சுற்றில் அதிரடியாக செயல்பட்டு, 88.17 மீட்டர் தொலைவுக்கு சிறப்பான முறையில் ஈட்டி எறிந்து, இறுதி வரை முன்னிலையில் நீடித்து பதக்கம் தட்டி சென்றார்.
காமன்வெல்த் போட்டியின் சாம்பியனான அர்ஷத் நதீம் (87.82 மீட்டர்) வெள்ளி பதக்கம் வென்றார்.
செக் குடியரசின் ஜேக்கப் வதிலெஜ் (86.67 மீட்டர்) வெண்கல பதக்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சோப்ராவின் 2-வது பதக்கம் இதுவாகும். கடந்த ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார். நடப்பு போட்டி தொடரில் அனைத்து வண்ணங்களிலான பதக்கங்களையும் இந்தியா கைப்பற்றி உள்ளது.