“நீர் மேலாண்மையில் தமிழகம் முன்னோடி” – எடப்பாடி பெருமிதம்

சென்னை, நவ.21-
நீர் மேலாண்மையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று தமிழக அரசு சார்பில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ள சென்னை கலைவாணர் அரங்கத்திற்கு வருகை தந்தார். அவரை வரவேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவரும் விநாயகர் சிலையையும், நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக அமித்ஷாவிற்கு வழங்கினர்.
இந்த விழாவின் போது அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அமித்ஷா காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து விழாவில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், “இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும்” என்று தெரிவித்தார். மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் 3-வது முறையாக வெற்றிக்கனியை பறிப்போம் என்றும் அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் நீர் மேலாண்மையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக இருப்பதாகவும், புதிய திட்டங்களால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் அவர் கூறினார். துணை முதலமைச்சர் தெரிவித்தது போல் தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “மழை நீர் வீணாவைதைத் தடுக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். பருவ காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயர பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு விரைந்து அனுமதிக்க வேண்டும். தமிழகத்தின் முக்கிய நதி நீர் இணைப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.