பொள்ளாச்சி: அக்டோபர் : 7 – வரையாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு புத்தகங்களை எழுதிய வனவிலங்கு பாதுகாவலரான ஈ.ஆர்.சி. தாவீதாரின் பிறந்தநாள், நீலகிரி வரையாடுகள் தினமாக இன்று முதல் கொண்டாடப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் பிறந்த டாக்டர் ஈ.ஆர்.சி.தாவீதார், 1960-களில் நீலகிரி வரையாடுகள் பற்றிய ஆய்வுகளில் முன்னோடியாக விளங்கியவர். அவர் 1963-ம் ஆண்டு நீலகிரி நிலப்பரப்பில் நீலகிரி வரையாடுகளின் முதல் கணக்கெடுப்பை மேற்கொண்டார். நீலகிரியில் 38 விலங்குகளைக் கொண்ட மிகப்பெரிய மந்தை உட்பட சுமார் 400 வரையாடுகள் இருப்பதாக தெரிவித்தார்.
1975-ம் ஆண்டில், மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுவதும் நீலகிரி வரையாடுகள் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்டு, காடுகளில் சுமார் 2200 வரையாடுகள் உள்ளதாக அவர் மதிப்பிட்டார். நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு பற்றி விஸ்பர்ஸ் ஃப்ரம் தி வைல்ட், தி சீட்டல் வாக் – லிவிங் இன் தி ஜங்கிள், த தோடாஸ் அண்ட் தி தஹ்ர் போன்ற பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளார்.
இது தோடா பழங்குடியின மக்களுக்கும், நீலகிரி வரையாட்டுக்கும் இடையிலான தொடர்பை சித்தரிக்கிறது. தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞராகவும், வனவிலங்கு பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட புகைப்படக் கலைஞராகவும் டாக்டர் ஈ.ஆர்.சி.தாவீதார் இருந்தார். நீலகிரி நிலப்பரப்பு மீது அவர் கொண்டிருந்த காதல், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞராக மாற்றியது.