நூதன முறையில் வழிப்பறி – ஆசாமி கைது

பெங்களூர் : நவம்பர். 15 – மன்னிப்பு கேட்கும் சாக்கில் வெளிநாட்டு பிரஜைகளின் ரொக்கம் , கார் மற்றும் மொபைல் போனை அபகரித்த பலே திருடனை பானசாவாடி போலீசார் கைது செய்துள்ளனர். சையத் யாசீன் (26)என்பவன் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி. இவனிடம் தற்போது கூடுதல் விசாரணை நடந்து வருவதாக டி சி பி டாக்டர் பீமா ஷங்கர் குலேத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சையத் யாசீன் மற்றும் தற்போது தலைமறைவாயுள்ள முஹம்மத் மன்சூர் நள்ளிரவுகளில் தனியாக செல்லும் கார்களை பின்தொடர்ந்து பின்பக்கமாக மோதுவர்கள். பின்னர் காரை ஓவர் டேக் செய்து மன்னிப்பு கேட்கும் சாக்கில் காரில் எத்தனை பேர் உள்ளார்கள் என்பதை நோட்டம் விட்டு தனியாக உள்ளார் என தெரிந்தவுடன் அந்த காரை தடுத்து நிறுத்தி கத்தி காட்டி மிரட்டி ரொக்கம் விலையுயர்ந்த பொருள்கள் மற்றும் காரை அபகரித்த்துக்கொண்டு கொண்டு தப்பிவந்துள்ளனர். குற்றவாளிகள் கடந்த நவம்பர் 11 அன்று சூடான் நாட்டை சேர்ந்த பிரஜையிடம் கத்தி காட்டி மிரட்டி காரை அபகரித்து சென்றுள்ளனர். இது குறித்து சூடானை சேர்ந்த பிரஜை பானசவாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கையில் ஈடு பட்ட பானசாவாடி போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 2 லட்ச ரூபாய்கள் மதிப்புள்ள ஒரு ஹூண்டாய் கார் , மற்றும் ஒரு பைக்கை கைப்பற்றியுள்ளதாகவும் மேலும் இவர்களிடம் விசாரணை நடந்துவருவதாகவும் டி சி பி தெரிவித்தார்.