நெருங்கும் மகரஜோதி – ஒரே நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்

கேரளா: ஜன. 8: மகரஜோதி நெருங்கும் நிலையில் சபரிமலையில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சபரிமலையில் ஜன.,15-ல் மகர ஜோதி தரிசனமும், அன்று அதிகாலை மகர சங்கரம பூஜையும் நடக்கின்றன. ஜன.,13-ல் பந்தளத்தில் இருந்து திருவாபரணப் பவனி புறப்படுகிறது. சபரிமலையில் பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியையும் அந்த நேரத்தில் வானில் ஜொலிக்கும் மகர நட்சத்திரத்தையும் தரிசிக்க பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கூடுவர்.
இந்நிலையில், மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் நடை திறக்கப்பட்டதில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். இதனால் பம்பை, எரிமேலி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் அடைக்கப்பட்டு மணிநேரம் காத்திருக்கும் சூழலும் உருவாகியுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் 90,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. மேலும், வரும் 10ம் தெத்து முதல் ஸ்பாட் புக்கிங் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.