நெல்லை, கோவையில் ராகுல் பிரசாரம்

சென்னை/ ஏப். 12:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி திருநெல்வேலி, கோவையில் இன்று இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் பாஜகவின் அரசியலுக்கு எதிராக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4,000 கி.மீ. தொலைவுக்கு முதல்கட்ட இந்திய ஒற்றுமைப் பயணம், மணிப்பூரில் இருந்து மும்பை வரை 6,500 கி.மீ. தொலைவுக்கு 2-ம் கட்ட ஒற்றுமை நீதிப் பயணம் ஆகியவற்றை ராகுல் காந்தி மேற்கொண்டார். இதற்கு மக்களிடம் பெரிய ஆதரவு கிடைத்தது.
மு.க.ஸ்டாலினுடன் இணைந்து… இந்நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் இன்று (ஏப். 12) மாலை 3 மணிக்கு திருநெல்வேலி பெல் மைதானத்தில் நடைபெறும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார், தொடர்ந்து, மாலை 6 மணியளவில் கோவை செட்டிபாளையம் எல். அண்டு டி பைபாஸ் சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பங்கேற்கிறார்.
பாஜக ஆட்சி அமைத்தது முதல் சமூக நீதியில் அக்கறையின்றியும், இடஒதுக்கீட்டு முறைக்கு மாற்றாகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் சமூக நீதி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
2017-ல் இருந்து தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் கீழ், மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான 27 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. இதனால் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான 10 ஆயிரம் இடங்கள் பறிபோனதுடன், அந்த இடங்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டன.
2024 தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி, சமுதாயத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, இடஒதுக்கீட்டில் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து, சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்று நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.