நேபாளத்தில் நிலநடுக்கம்: பெண் பலி

புதுடெல்லி, ஜன. 25 –
அண்டை நாடான நேபாளத்தில் நேற்று பிற்பகல் 2.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுதுர்பஸ்சிம் மாவட்டம் பஜுரா மாவட்டம் மேளா பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானதாக பூகம்ப ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடினர். முதல்கட்ட தகவல்களின்படி, ஒருவர் உயிரிழந்தார்.
அவர் 35 வயது பெண். கவுமுனி ஊரக நகராட்சியை சேர்ந்த அவர், புல் அறுத்துக்கொண்டிருந்தபோது பாறை உருண்டு வந்து மோதியதில் அவர் பலியானார். பஜுரா மாவட்டத்தில் எண்ணற்ற வீடுகள் இடிந்து விழுந்தன. ஒரு கோவிலில் விரிசல் ஏற்பட்டது. பூகம்பத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 40 ஆடுகள் பலியாகின. ஒருவர் காயம் அடைந்தார். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி, மேற்கு நேபாளத்தில் உள்ளது. அப்பகுதி முழுவதும் நிலநடுக்கத்தால் அதிர்ந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பிதோராகார் பகுதிக்கு 148 கி.மீ. கிழக்கில் பூகம்பத்தின் மையப்பகுதி அமைந்துள்ளது.