நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய தடை

காத்மாண்டு, ஜன. 14- நேபாள நாட்டவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் மத்திய வங்கியான நேபாள ராஸ்ட்ரா வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நேபாள நாட்டவர்கள் வெளிநாடுகளில் நிலம், வீடு, சொத்து, கடன் பத்திரம் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்களில் பணத்தை டெபாசிட் செய்ய அனுமதி கிடைக்காது. வங்கி விதியின்கீழ் வெளிநாட்டில் யாரும் இது போன்ற பணம் செலுத்துவதில் ஈடுபடக்கூடாது. இந்த விதியை யாராவது மீறினால் நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாளத்தின் மத்திய வங்கி பணப்புழக்க நெருக்கடியை காரணம் காட்டி வாகனங்கள் மற்றும் பிற ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.