நேரு கோப்பை படகு போட்டி- மகாதேவி காடு பாம்பு படகு குழுவுக்கு முதல் பரிசு

திருவனந்தபுரம்,செப். 5-
கேரள மாநிலத்தில் ஓணப்பண்டிகை காலத்தில் படகு போட்டிகள் நடைபெறும். இதில் ஆலப்புழாவின் புன்னமட காயலில் நடைபெறும் நேரு கோப்பைக்கான படகு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த போட்டியை காண நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதுபோல வெளிநாடுகளில் இருந்தும் இப்போட்டியை காண பலர் வருவதுண்டு. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக நேரு படகு போட்டி நடைபெறவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளதால் நேரு படகு போட்டிக்கான அறிவிப்பு வெளியானது.
அதன்படி ஆலப்புழாவில் நேற்று பகல் 11 மணிக்கு இந்த போட்டி நடந்தது. இதில் 20 பாம்பு படகுகள் உள்பட 77 படகுகள் கலந்து கொண்டன. இந்த போட்டியை அந்தமான், நிகோபார் தீவுகளின் துணை நிலை கவர்னர் தொடங்கி வைத்தார். போட்டி தொடங்கிய 4.30.77 நிமிடங்களில் மகாதேவிக்காடு காட்டில் தெக்கத்தில் சுண்டன் பாம்பு படகு குழுவினர் முதல் பரிசை பெற்றனர். இக்குழுவினர் இதற்கு முன்பு 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடந்த படகு போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருந்தனர். இப்போதும் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் 3-வது முறையாக நேரு கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர். 2-வது பரிசு நடுப்பாகம் சுண்டன் படகு குழுவிற்கு கிடைத்தது.