நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய 3 கி.மீ ஓடிய டாக்டர்

பெங்களூரு: செப்டம்பர். 12 – பெங்களூரு என்றாலே போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கமான கதையாகிவிட்டது. அதுவும் மழைக்காலங்களில் பெங்களூரு போக்குவரத்து இன்னும் கடினமான சவால் என்பது உலகமறிந்த விஷயம்.
இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி பெங்களூரு மழை, வெள்ளத்துக்கு இடையே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட மருத்துவர் ஒருவர் அதில் மாட்டிக் கொண்டார். குறித்து நேரத்தில் அறுவை சிகிச்சைக்கு செல்ல வேண்டி இருந்ததால் அவர் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தை 45 நிமிடங்கள் ஓட்டமும் நடையுமாக கடந்து சென்று கடமையை நிறைவேற்றியுள்ளார்.
பெங்களூரு சர்ஜாபூரில் உள்ளது அவர் பணி புரியும் தனியார் மருத்துவமனை. டாக்டர் கோவிந்த் நந்தகுமார் சர்ஜாபூர் மாரதஹல்லி இடையே கடுமையான போக்குவரத்தில் மாட்டிக் கொண்டார். மருத்துவமனையில் பித்தப்பை அறுவை சிகிச்சைக்காக நோயாளி தயாராக இருக்க மருத்துவர் நந்தகுமார் காரில் இருந்து இறங்கி மருத்துவமனையை நோக்கி ஓடியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்தப் பேட்டி ஒன்றில், “நான் சர்ஜாபூரில் உள்ள மருத்துவமனயை அடைய வேண்டும். ஆனால் கார் கடுமையான போக்குவரத்து நெரிசலில் கன்னிங்ஹாம் சாலையிலேயே மாட்டிக் கொண்டது. கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. போக்குவரத்து சீராகும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அங்கே மருத்துவமனையில் எனக்காக நோயாளி காத்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் வந்தது. அதனால் காரில் இருந்து இறங்கி ஓடினேன். 45 நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்தேன். அன்றைய தின அறுவை சிகிச்சைகள் எல்லாமே நல்ல படியாக முடிந்தது” என்று கூறியுள்ளார். மருத்துவர் நந்தகுமாருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. அதேவேளையில் பெங்களூரு போக்குவரத்து நெரிசல் எத்தனை ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாமல் ஒரே மாதிரிதான் இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
மருத்துவர் நந்தகுமார் கடந்த 18 ஆண்டுகளாக ஜீரண மண்டல உறுப்புகள் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். கேஸ்ட்ரோ என்ட்ரோ அறுவை சிகிச்சை நிபுணர் என்று அழைக்கின்றனர். ஜீரண மணடல் உறுப்புகளில் ஏற்படும் ட்யூமர் கட்டிகளை அகற்றுவதில் அவர் கை தேர்ந்தவராக இருக்கிறார்.