உடுமலை: ஆகஸ்ட் 19
உடுமலை அருகே, ஈசல் திட்டு மலைவாழ் மக்கள் குடியிருப்பில், உடல் நலம் பாதித்தவரை தொட்டில் கட்டி, கரடு, முரடான மலைப்பாதையில் ஏழு.கிமீ., துாரம் துாக்கி வந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த அவல நிலைக்கு தீர்வு காண வேண்டும், என அம்மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம், ஈசல்திட்டு குடியிருப்பில், 120 வீடுகளில், 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, இங்கு வசிக்கும், திருமூர்த்தி மகன் ஸ்ரீ காந்த்க்கு, 20, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வாந்தி, மயக்கம் ஏற்பட்டதோடு, எழ முடியாத நிலையில், கை, கால்கள் செயல் இழந்துள்ளது. உடனடி மருத்துவ சிகிச்சைக்கு வழியில்லாத நிலையில், நேற்று காலை, குடியிருப்பை சேர்ந்த இளைஞர்கள் தொட்டில் கட்டி, கரடு, முரடான மலைப்பாதையில், வன விலங்குகள் அபாயத்திற்கு மத்தியில், ஏழு கி.மீ., துாரம் சுமந்து வந்து, சமதளப்பரப்பிற்கு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ்சில் ஏற்றி, உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அதிகாரிகள் அலட்சியம் மலைவாழ் மக்கள் கூறியதாவது: உடுமலை, அமராவதி வனச்சரக பகுதியில், 15 மலைவாழ் மக்கள் குடியிருப்பில், 3,600க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு, 2006 வன உரிமை சட்டப்படி, ரோடு, குடிநீர், கல்வி, மருத்துவம், வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி தொடர்ந்து போராடி வருகிறோம்.

















