நோ-பால் கொடுக்காததற்கு விராட் கோலியின் கோபம் நியாயமா?

நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவின் 222 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டி 1 ரன்னில் துரதிர்ஷ்டவசமாக ஆர்சிபி தோற்றது. மிட்செல் ஸ்டார்க்கை கரன் சர்மா சிக்சர்களை விளாசுவது என்பதெல்லாம் ஐபிஎல் என்ற கிரிக்கெட் வகைக்கேயுரிய விசித்திரம் அல்லது நகை முரண். இந்தப் போட்டியில் விராட் கோலி ஆட்டமிழந்த பந்து இடுப்புயரத்திற்கு மேல் வந்தது என்று கோலி கோபாவேசத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ஹாக் ஐ கேமரா மிகச்சரியாகவே அதைப் படம் பிடித்திருந்தது. கோலி 7 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்கள் என்று 18 ரன்களை அடித்து இலக்கை நோக்கிய பயணத்தை அதிரடியாகவே தொடங்கி வைத்தார். ஆனால் அவர் எப்படியும் மிடில் ஓவர்களில் தொங்கி விடுவார் என்பது அவரது இன்னிங்ஸ்களை இதுவரை ஐபிஎல் தொடரில் பார்த்தவர்களுக்குப் புரியும் எனவே அவர் ஆட்டமிழந்தது ஒரு விதத்தில் மறைமுக ஆசீர்வாதமே. கோலி இப்படிப்பட்ட சிறு சிறு கேமியோக்களை ஆடுவது அணிக்குப் பயன் தரும் கடைசி வரை நின்று 71 பந்துகளில் 100 ரன்களை எடுப்பது அணியின் வெற்றிக்கு உதவாது என்பது பல முறை நிரூப்பிக்கப்பட்ட ஒன்று. நேற்று ஹர்ஷித் ராணாவின் உயர் ஃபுல்டாஸில் கேட்ச் ஆகி வெளியேறினார் கோலி. கோலி வாதம் என்னவெனில் என் பேட்டில் படும்போது அது இடுப்புக்கு மேலே இருந்தது என்பதுதான். ஆனால் 22 யார்டு பிட்சில் ஒரு பேட்டர் 10வது யார்டில் வந்து ஒரு பந்தை அடிக்கப் போகும் போது அதன் பிறகு அந்தப் பந்து கீழே இறங்குமா இல்லையா என்று பார்ப்பதுதானே முறை. பந்தை சந்தித்த இடத்தில் அது இடுப்புக்கு மேலே இருந்தது என்ற வாதம் எடுபடாது. கோலி கிரீசுக்கு வெளியே அந்தப் பந்தைச் சந்தித்தார். அவர் கிரீசுக்கு உள்ளே பந்தைச் சந்தித்திருந்தால் பந்து இடுப்புக்குக் கீழே இருந்திருக்கும், பந்தை அவர் சரியான இடத்தில் சந்திக்காமல் நடுவர்களை குறைகூறுவது தொழில்முறை கிரிக்கெட் வீரருக்கு சரியான அணுகுமுறை அல்ல.