பக்தர்கள் தங்க வைப்பு

சதுரகிரி:டிச. 18: மார்கழி மாத பிறப்பையொட்டி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆனால், நேற்று பிற்பகலுக்கு மேல் மழை பெய்ததால், 100 பக்தர்கள் மலைக்கோயிலிலேயே தங்க வைக்கப்பட்டனர்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில், சந்தன மகாலிங்கம் கோயிலில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய முக்கிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறிச் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். தொடர் மழை காரணமாக, கடந்த 2 மாதங்களாக சதுரகிரி செல்வதற்குப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆண்டுதோறும் மார்கழி மாத பிறப்பு அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு மார்கழி மாத சிறப்பு வழிபாட்டுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, நேற்று 1,500-க்கும் அதிகமான பக்தர்கள் சதுரகிரி சென்று தரிசனம் செய்தனர். மலைக்கோயிலில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து, நேற்று பிற்பகலுக்கு மேல் பக்தர்கள் மலை இறங்கத் தொடங்கினர். அப்போது, சாரல் மழை பெய்ததால் வனத் துறையினர் பாதுகாப்புடன் பக்தர்கள் பத்திரமாக அடிவாரம் திரும்பினர். ஆனால், மழை காரணமாக 100 பக்தர்கள் மலைக் கோயிலிலேயே தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இன்று காலை பத்திரமாக அடிவாரத்துக்கு அழைத்து வரப்படுவர், என வனத் துறையினர் தெரிவித்தனர்.