பக்தர்கள் வெள்ளத்தில் தேரில் வலம் வந்த மேல்மலையனூர் அங்காளம்மன்

விழுப்புரம்:மார்ச் 14- மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்றைய தினம் விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசு தேர்வுகள், முக்கியமான அலுவல் பணிகள் குறைவான பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம். லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மனை தரிசனம் செய்ய வருவார்கள். இந்த அம்மன் இங்கு வந்தது பற்றி புராண கதை ஒன்று உள்ளது. சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. சிவனின் உருவமே பொலிவு இழந்தது. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி சாபமிடவே, சிவபெருமான் பிச்சை எடுக்கும் கோலத்தையும், அன்னை பார்வதி அலங்கோல வடிவத்தையும் பெற்றனர். இதையடுத்து விஷ்ணு, தன் தங்கை பார்வதியிடம், ‘கலங்காதே! நீ மலையரசன் பட்டினத்தில் பூங்காவனத்துப் புற்றில் பாம்பு வடிவில் இருக்கும்பொழுது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்’ என வழிகாட்டினார். அங்காளபரமேஸ்வரியாக அகோர உருவம் கொண்ட அன்னை பார்வதி நாடெல்லாம் அலைந்து திரிந்து திருவண்ணாமலை வந்து சேர்ந்தாள்.அன்னை புற்று வடிவமெடுத்து, மேல்மலையனூர் அரண்மனையில் உள்ள பூங்காவனத்தில் ஐந்து தலை நாகமாக வாழ்ந்து வந்தாள். பூங்காவனத்தில் பெரிய புற்று இருப்பதைக் கண்டு, மலையரசன் அதனை இடிக்க ஆள் அனுப்பினான். அந்த ஆட்கள் அனைவரையும் அன்னை புற்றுக்குள் மறைந்தாள். மீண்டும் ஆள் அனுப்ப, அவர்களும் புற்றுக்குள் மறைந்தனர். இதைக் கண்டு அஞ்சிய மலையரசன், தன் தவறை உணர்ந்து புற்றை வணங்கி, நின்றபோது அன்னை காட்சி கொடுத்தாள்.