பங்களாதேஷில் கொண்டாட்டம்

டாக்கா, ஜூலை 25- இந்தியாவின் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் திரவுபதி முர்மு, குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பங்களாதேஷ் தலைநகர டாக்காவில் பழங்குடியின மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். தேசிய நாடாளுமன்றம் முன் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர்கள் ஆடி பாடி மகிழ்ந்தனர். ஆதிவாசி மேம்பாட்டு கவுன்சில், டாக்கா வங்காள கொண்டாட்டக் குழு, சிறு இனக் குழுக்களை சேர்ந்த பல்வேறு மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், பழங்குடியின குழுக்களின் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்தியாவில் சிறிய இனத்தைச் சேர்ந்த பெண் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இந்தியா, வங்கதேசம் மற்றும் முழு உலகிற்கே ஒரு நல்ல செய்தி என்று பங்களாதேஷ் ஆதிவாசி மன்ற பொதுச் செயலாளர் சஞ்சிப் ட்ரோங் தெரிவித்தார். இது தமது நாட்டில் உள்ள சிறுபான்மை இன மக்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு முர்மு பங்களாதேஷுக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்தார். இந்திய குடியரசுத் தலைவராக முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான நாள் என்று டாக்கா பேராசிரியர் மெஸ்பா கமல் குறிப்பிட்டார்.