பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

சென்னை, அக். 20-
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி ஆன்மிக குருவாக விளங்கி வந்தவர் பங்காரு அடிகளார். கடந்த ஓராண்டாகவே அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது.சில மாதங்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.ஆதிபராசக்தி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை 5.45 மணி அளவில் பங்காரு அடிகளாரின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 82. பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் இன்று மாலை நடக்கிறது.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் மறைவு செய்தி கேட்டு, தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பெண் பக்தர்கள் சாரை சாரையாய் திரண்டு வந்து அடிகளார் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்களும் நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மேல்மருவத்தூரில் உள்ள பங்காரு அடிகளார் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், செஞ்சி மஸ்தான் ஆகியோரும் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் பங்காரு அடிகளாரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.