பங்குச் சந்தை இன்று உச்சம் தொடும்

மும்பை: ஜூன் 3- கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வந்தது. நேற்றுமுன்தினம் இறுதி கட்ட வாக்குப் பதிவு முடிந்த நிலையில், ஊடகங்கள் கருத்துக் கணிப்பு வெளியிட்டன.
பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று பெரும்பாலான ஊடகங்கள் கணிப்பு தெரிவித்தன.
இதனால், இன்றைய பங்கு வர்த்தகம் ஏற்றத்தில் காணப்படும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அதேபோல், ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இதனால், அன்றைய தினம் பங்குச் சந்தை புதிய உச்சம் தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பங்குச் சந்தை நிபுணர்கள் கூறுகையில், “இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும் வலுவான போட்டி இருந்தது. காங்கிரஸ் முந்தைய தேர்தலைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கை பரவலாக உருவானது. பாஜக 2019 மக்களவைத் தேர்தலில் 300-க்கு மேற்பட்ட இடங்களில் வென்றது. ஆனால், இந்தத் தேர்தலில் காங்கிரஸின் வலுவான போட்டியால், பாஜக அதிக இடங்களில் வெல்வது சவாலாக இருக்கும் என்ற சூழல் உருவானது. இதனால் தேர்தல் முடிவு குறித்து குழப்பம் இருந்தது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அந்தக் குழப்பத்தை நீக்கியுள்ளன. பெரும்பாலான கணிப்புகள் பாஜக 300-க்கு மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளன. இதனால், திங்கள் கிழமை நிஃப்டி 23,000-க்கு மேல் உயரும்.