சென்னை, ஏப்ரல் 11- பங்குனி உத்திரம் இன்று அனைத்து முருகன் கோயில்களிலும் கொண்டாடப்படும் நிலையில் இன்று வழிபாட்டுக்கு உகந்த நேரம், வழிபாடு செய்யும் முறை, சுவாமிக்கு படைக்க வேண்டிய நெய்வேத்தியம் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விரதநாட்களில் ஒன்றுதான் பங்குனி உத்திரம். சிவன் – பார்வதி, முருகன்- தெய்வானை, ராமர்- சீதை போன்ற தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்ற நாளாக பங்குனி உத்திரம் கருதப்படுகிறது. திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் மட்டுமின்றி திருமணமானவர்களும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய இந்த நாளில் விரதமிருக்க வேண்டும். அது போல் வேலை கிடைக்காதவர்களும் விரதமிருந்து வழிபட்டால் வேலை கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த வருடத்தின் பங்குனி உத்திரம், பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் 2025 இன்று பிற்பகல் 3 மணிக்கு முடிகிறது. முன்னதாகவே வீட்டை சுத்தப்படுத்தி பங்குனி உத்திரம் நாளில் விளக்கேற்றி பூஜை செய்யலாம். பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து பூஜை செய்து சிவபெருமான், முருகனை வழிபட்டால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், திருமண தடைகள், போன்றவை நீங்கி வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இன்றைய நாளில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வழிபாடு செய்யலாம். பங்குனி உத்திரம் நாளில் வேண்டுதல் நிறைவேற முருகனை வேண்டிக் கொண்டு பால்குடம் எடுத்து வழிபாடு செய்யலாம். வீட்டில் முருகன் சிலை, வேல் இருந்தால் அவற்றிற்கு பால் அபிஷேகம் செய்யலாம். பங்குனி உத்திரத்தின் போது முருகனுக்கு நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல் அல்லது தேனும் திணை மாவும் சேர்த்து படைக்கலாம். திருமணத் தடை நீங்க, குழந்தை வரம் கிடைக்க, வேலை வாய்ப்பு கிடைக்க திருப்புகழை பாடி முருகனை வழிபடலாம்.