பச்சை பட்டு உடுத்தி செயற்கை வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்


மதுரை, ஏப். 27- பிரசித்தி பெற்ற மதுரை அழகர்கோவிலின் சித்திரை பெருந்திருவிழா கொரோனா பரவல் காரணமாக கோவிலின் உள்வளாகத்திலே அரசு வழிகாட்டுதல்படி நடந்து வருகிறது. கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இந்த திருவிழாவில் நேற்று காலையில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான எதிர்சேவை பக்தர்கள் யாருமின்றி மிக எளிமையாக கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இன்று 27-ந் தேதி காலை 8 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் செயற்கையாக உருவாக்கிய வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் இறங்கினார்.
பக்தர்களின்றி இந்த ஆண்டு மிக எளிமையாக சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியானது, மதுரை சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சி என்பதால், அவற்றை கோவில் இணையதளத்தில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.